மன்னராக முதல் பிறந்த நாளைக் கொண்டாடினார் மன்னர் மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி மரணமடைந்தார். அவரது மூத்த மகன், வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தனது தாயின் மறைவுக்குப் பின் மன்னராக அரியணையில் அமர்ந்தார். இப்போது அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். அவர் மன்னராக பொறுப்பேற்ற பின் இன்று (நவம்பர் 14ம் தேதி) தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் மன்னராகக் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக ராணுவ வீரர்கள் பக்கிங்காம் அரண்மனையில் பாண்ட் இசைத்து பிறந்த நாள் வாழ்த்து பாடினர். பீரங்கி குண்டுகள் முழங்கி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்பட்டார். லண்டன் மாநகரமெங்கும் ஆங்காங்கே குண்டுகள் முழங்கப் பட்டு அரசரின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.