ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானின் சாபம் நீங்கிய நாள்
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த பொழுது உலகமே சந்தோஷத்தில் திளைத்தது. அந்த திருமணத்தை சிறப்பாக நடத்திய பிரம்ம தேவரை சிவனார் பாராட்டினார். இதனால் கர்வமடைந்த பிரம்மா யாரும் கேட்காத தட்சணையை கேட்டார்.
உலகை ஆளும் ஈசனுக்கே தான் திருமணம் செய்து வைத்த அகந்தையுடன், தனக்கு ஈசன் சிறந்த தட்சணை அளிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஈசனும் சம்மதித்தார்.
ஆரம்ப காலத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள் இருந்தன. தனது ஐந்து முகங்களுக்கும் வெவ்வேறு திசைகளில் இருந்து ஈசன் தட்சணை அளிக்க வேண்டும் எனக் கேட்டார். ஈசன் நான்கு முகங்களுக்கு நான்கு திசைகளில் இருந்து தட்சணை அளித்தார். ஐந்தாவது முகத்திற்கு எந்த திசையில் இருந்து தட்சணை கொடுப்பது என்று அறியாமல் நின்றார்.
பின் ஈசன் ஸ்ரீமன் நாராயணனின் உதவியை நாடினார். பெருமாள் ஈசனிடம் ஐந்தாவதாக திசை என்று ஒன்றும் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அது ஏதேனும் இரு திசைகளின் கலவையாகத் தான் இருக்கும் (வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு) என்றும் கூறினார்.
ஈசன் செய்வதறியாது திகைத்தார். அதைக் கண்ட பிரம்மா ஏளனத்துடன் எள்ளி நகையாடினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரம்மா, அந்த தலை ஈசனின் கையில் திரு ஓடாக மாறி ஒட்டிக் கொள்ளும் என்று சபித்தார்.
தலையும் பிச்சை பாத்திரமாக மாறி ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டது. ஈசன் இது குறித்து பெருமாளிடம் கேட்டபோது அவர் அந்த சாபம் நீங்க வெகு காலமாகும் என்றார்.
பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று ஈசன் பெருமாளின் உதவியை நாடினார். பெருமாளும் ஈசனை அழைத்துக் கொண்டு காசிக்கு வந்தார். அங்கு குடி கொண்டிருக்கும் அன்னபூரணி தேவியிடம் ஈசனின் பிச்சை பாத்திரத்தை நிரப்பும் படி கூறினார்.
அன்னபூரணி தேவியும் அவ்வாறே செய்தார். பெருமாள் தேவியிடம் திரு ஓட்டை நிரப்பிக் கொண்டே பின்னால் நகரச் சொன்னார். தேவி நகர ஆரம்பித்த பொழுது ஓடும் அவருடன் சேர்ந்து நகர்ந்தது. பின்னர் திரு ஓடு நிரம்பியது.
அப்போது பெருமாள் ஈசனிடம் கையை இறுக்கமாக மூடிக் கொள்ளும் படி கூறினார். ஈசனும் கையை மூடிக் கொண்டார். அந்த சமயம் திரு ஓடு மறுபடியும் ஈசனின் கையில் ஒட்ட முயன்று பின்னர் முடியாமல் கீழே விழுந்து உடைந்தது. ஈசனும் சாபத்தில் இருந்து விடுபட்டார்.
அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி பௌர்ணமி நாளில் சாப விமோசனத்தை குறிக்கும் வகையில் ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப் பட்டு வருகிறது.

Comments
Post a Comment